×

ஸ்ரீ ரங்கத்தில் 37 அடி உயரமான அனுமன்!

திருச்சியை அடுத்த ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகப் பெரிய ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவில் உருவான விதங்கள், ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொண்டார் கோயில் நிர்வாகியும், ஆஞ்சநேயர் உபாசகருமான வாசுதேவன். அவர் கூறியது அப்படியே…

“நான் ராம பக்தன். ஆகையால், வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி 21 நாட்கள் இடைவிடாது ராம ஜபம் செய்தேன்.
அதில், அனுமாரே நேரடியாக பிரசன்னம் ஆகி;
“இப்படி கடுமையாக தவம் இருக்கிறாயே உனது ஆசை என்ன’’ என்று கேட்டார்.

“எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும். சுபிட்சமாக இருக்க வேண்டும். நீ என்னுள் வரவேண்டும்’’ என நான் கூறிய அந்த நொடியே, “இந்த தருணத்தில் இருந்து, உன் மனசில் நான் இருப்பேன். இந்த கிரகத்தில் நான் இருப்பேன். பக்தர்களின் நியாயமான குறைகளை என்னிடம் நீ தெரிவித்தால் அதனை நான் நிவர்த்தி செய்வேன். இன்று முதல் அது நடக்கும்’’ என்று ஆஞ்சநேயர் சொன்னார். அடுத்த மூன்றாவது நாட்கள், முக்கால் அடி ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒன்றை என் மகன் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்.

“நான்தான் வந்துருக்கேன், உன் வீட்டிலேயே பிரதிஷ்டை செய்’’ என்றார் அனுமார். அதன் பின் பத்தர்கள், அனுமாரை தரிசிக்க வரத் தொடங்கினர். பக்தர்கள் தெரிவிக்கும் குறைகளை, அனுமாரிடம் தெரிவிப்பேன். பல பக்தர்களின் குறைகளை அனுமார் நிவர்த்தி செய்திருக்கிறார். சனிக்கிழமைகளில், இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதனால், வெளிமாநில பக்தர்களும் வருகை தந்து சிறப்பு செய்வார்கள். அன்று நாள் முழுவதும், பக்தர்களை பார்த்த மகிழ்ச்சியில் ஆஞ்சநேயர் காணப்படுவார்.

நாட்கள் செல்ல, “தெற்கு பார்த்து நான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறேன், விஸ்வரூபமாக நான் வரப்போகிறேன். எனக்கு 33 அடியில் கோயிலைக் கட்டு’’ என எனக்கு உத்தரவிட்டார் ஆஞ்சநேயர். கோயில் கட்ட எனக்கு இடம் கிடைத்துவிட்டது. ஆனால், சிலை எழுப்ப கற்கள் கிடைக்கவில்லை.

எங்கெங்கோ தேடிப்பார்த்தோம், 33 அடியில் கற்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்திற்கு, 6 அடி அளவில் ராமர் விக்ரஹம் செய்ய ஆரம்பிதோம். ராமர் உற்சவர் அதாவது ராமர் விக்ரஹம்தான் முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்த மறுநாளே, ஆஞ்சநேயரின் தீவிர பக்தர் ஒருவர் போன் செய்து.

“அனுமாருக்கு தேவையான கற்களை தேடி எடுத்து விட்டோம்’’ என்று சொன்னதும் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆஞ்சநேயரின், தலை முதல் பாதம் வரை 37 அடியும், பீடம் 4 அடியும் ஆகமொத்தம் 41 அடியில் கச்சிதமாக, சிற்பிகள் செய்து கொடுத்தார்கள். ஆஞ்சநேயர் கையில், ஜெபமாலை உள்ளது.

சதா.. ராமரை நினைத்து ராமஸ்மரணம் செய்து கொண்டிருக்கிறார். ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி இருப்பதால், லோகம் சுபிட்சமாக இருக்கும்.

ஆஞ்சநேயரின் மொத்தம் எடை 108 டன். எப்படி எடுத்து செல்வது என்பதில், குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்,

“முதல் முதலில் லாரி வாங்கி உள்ளோம் ஆஞ்சநேயரை நாங்கள் கொண்டு வருகின்றோம்’’ என சென்னையில் இருந்து ஒருவர் தேடிவந்தார். ஓட்டுனர்கள், ராம மந்திரங்கள், சுந்தர காண்டம், அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்தவாறே லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். அதை கேட்டுக்கொண்டே வந்தோம். எங்கும் தடையில்லாமல் ஸ்ரீ ரங்கம் அருகில், மாம்பழச்சாலை என்னும் இடத்தில் நள்ளிரவு 1மணிக்கு வந்தடைந்தோம்.

எப்படி ராமாயணத்தில் தன் உடலை சுருக்கிக்கொண்டு காரியங்களை சாதித்துக் கொண்டாரோ, அப்படி ஒரு ஆச்சரியம் இங்கும் நடந்தது. ஆம்! மேலூர் சாலையின் அகலம் 11 அடி, அனுமாருடன் வண்டியின் அகலம் 10.45 அடி, எந்த ஒரு இடையூறும் இல்லாமல், தன் 37அடி உருவத்தை சுருக்கிக் கொண்டு, இந்த கிராமத்திற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். லாரியில் இருந்து தூக்கி, பிரதிஷ்டை செய்ய உதவுவதற்காக எல்&டி(L&T) கம்பெனியை நாடினோம். உடனடியாக, மறுக்காமல் செய்து கொடுத்தார்கள். எனக்கும் சந்தோஷம், அனுமாருக்கும் சந்தோஷம்.

“யஸ்து விஷ்ணு க்ருஹம் குர்யாத் வைகுண்டே தஸ்ய மந்திரம்
யஸ்து பிம்பம் ஹரே: குர்யாத் ஸது விஷ்ணோ லயம் வ்ரஜேத்
ஸபாம் ச மண்டபம் ரம்யம் சர்வம் தஸ்ய வ்ரஜேத் பரேஅம்பரே
ஸ பவேதமலே தாம்னி பரஸ்மிந்நேவ லீயதே’’

கோயில் கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ராமர் அகஸ்தியரிடத்தில் கூறியுள்ளார். அதில், கோயில் மற்றும் அதன் சார்ந்த வேலைகளை யவர் ஒருவர் செய்கின்றார்களோ அவர்களின் இல்லதிலேயே இறைவன் எப்பொழுதும் குடி இருப்பான் என்கிறார். அதன் படியே நானும், அனுமாரின் பக்தர்களும் திருப்பணிகளை செய்து வருகிறோம்.

இந்த கோயிலுக்கு, “தென் அயோத்தி ஸ்ரீ ராம பட்டாபிஷேக சஞ்ஜீவன ஆஞ்சநேயர்’’ என்று பெயர் வைக்கவும் என்று ஆஞ்சநேயர் எனக்கு உத்தரவிட்டார். அது போலத்தான், பெயர் வைத்துள்ளேன். இன்னும் முழுமையான திருப்பணிகள் முடியவில்லை. பக்தர்கள் அனைவரும், வரும் அனுமன் ஜெயந்தி அன்று இங்கு வந்திருந்து ஆஞ்சநேயரை சேவித்து, துன்பம் விலகி நன்மை பெறவேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

திருச்சி பஞ்சபூர் பேருந்து நிலையத்திலிருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் ஸ்ரீரங்கத்திற்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து, மேலூர் கிராமத்திற்கு மினி பேருந்து ஒன்று செல்கிறது. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மினி பேருந்து செல்வதால், ஆட்டோ அல்லது தனி வாகனம் மூலமாக செல்வது சிறப்பாகும்.

Tags : Anuman ,Sri Ranga ,Trishi ,Malur ,Anjaneyar ,Swami ,
× RELATED ராகு கேது எதைக் குறிக்கிறது?