×

பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைக்கும் சின்ன சங்கரன்கோயில்!

*முத்தாலங்குறிச்சி காமராசு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள பேய்குளம் கிராமம், முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர். தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம் இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமாக அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில்கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் பேய்குளம் என பெயர் பெற்றது. இதுபோலவே இந்த பகுதியில் பஞ்ச தலங்களில் ஒரு தலமான கட்டாரி மங்கலம் நடராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலைக் கட்டி முடித்து விட்டு, கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தார் வீரபாண்டிய மன்னர்.

அப்போது ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர் வேதவிற்பனர்கள். ஊர்மக்கள்கூடி கொடிமரத்தை கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகள் வரவேண்டும் என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடி வைத்துக் கொண்டார்களாம்.

கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்க்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில்தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு வர, எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர். தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். இதற்கிடையில் தேவதையில்லா கொடிமரத்தை கோயிலில் நாட்டவில்லை. ஆகவே, கட்டாரிமங்கலம் நடராஜர் கோயில் கொடிமரம் இன்றியே காணப்படுகிறது.

பேய்க்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது. பாரத திருநாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தமிழ்க் கடவுளாகிய இரண்டாம் படை வீடாம் திருச்செந்தூரில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானை தரிசனம் பண்ணுவதற்கு அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.

எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவபக்தர் இந்த பகுதியில் ஒரு மடம் அமைத்தார். இவ்வூரில் ஒரு சத்திரத்தை நிறுவி, அதில் அவர்களும், அவர்களின் குழந்தைகள் பால் அருந்துவதற்காக சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்தமடம் பசுமடம் என்று அழைக்கப்பட்டது.

பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் சித்தர் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். அவர் சிவன் மீது அதிக பிரியம் கொண்டவர். ஆண்டு தோறும் ஆடி தபசு காட்சியை காண சங்கரன் கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன் கோவில் செல்ல இயலவில்லை. ஒருசமயம் தபசு காலத்தில் சங்கரன்கோவிலுக்கு சென்று தவசுக்காட்சியை கண்டு களிக்க எண்ணினார். ஆனால், அவரால் அங்கு சென்று வர இயலவில்லை.

அதனால் மிகுந்த வருத்தத்தில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியையும் ஸ்ரீ கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார். அதன் பலனாக, சங்கரன் கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். தென்னகத்தில் தபசு காட்சி இறைவன் தந்த இந்த இடம் அல்லவா, சின்ன சங்கரன் கோவில் என்று எண்ணினார். இறைவனிடம் தனக்கு காட்சி தந்தது போலவே இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும் என்று கோரினார்.

இறைவனும் அவ்வாறே ஆகட்டும் எனகூறி மறைந்தார். தொடர்ந்து அவர் இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடிதபசு காட்சி மிகச்சிறப்பாக நடந்தது. சங்கரன்கோவில் சென்று காட்சி காண முடியாத பக்தர்கள் இங்கேயே ஆடிதபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன் பின், இந்த ஆலயத்தினை வணங்கிய பக்தர்கள் முயற்சியில் காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தனர். அதன் பின், ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி ஸ்ரீ கோமதி அம்பாளையும் பிரதான மண்டபத்தில் தெற்கு நோக்கியும் அமைத்தனர்.

ஸ்ரீ நடராஜப் பெருமாள், ஸ்ரீ சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் திருமேனியானது ஐம்பொன்னிலும், அதே மண்டபத்தில் அதிகார நந்தியையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சஸ்வரரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சந்நதி உள்ளது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் பழம் படைப்பதனால் நாகதோஷம் விலகும். இத்திருக்கோயிலில் ஸ்தல விருட்சம் வில்வ மரம் ஆகும். இந்த கோயில் இருக்கிற இந்த இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்பட்டது. கூட்டம் பெருக பெருக ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு மண்டக படியும் அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்பட்டது.

குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன்குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டக படியை நடத்தி வருகிறார்.பேய்க்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோயில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15 க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாள் அழைக்க புறப்படுவர். அம்பாளை சங்கரலிங்க சுவாமி சென்று அழைத்து வருவது, அதன் பின் 7 மணிக்கு பேய்க்குளம் பஜாரில் வந்து மக்களுக்கு திருக்காட்சி தருவது மிகச் சிறப்பானதாகும்.

அந்த வேளையில் சுவாமி மீது, அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருள்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள். இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை. இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள். இத்திருக்கோயிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வைத்து திருமணம் புரியும் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்கின்றனர். இத்திருக்கோயில் மிகவும் சாநியத்தியமானது.

உள்ளன்போடு பக்தி செலுத்தி வழிபாடு செய்கிறவர்களின் பிராத்தனைகள் அவர்கள் நினைத்தபடி கைகூடுகிறது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் நிலைத்து உள்ளது. முதலில் மடமாக இருந்த கோயிலில் பின் கருவறைமட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கும்பாபிஷேகத்தின் போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும் அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம் நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சந்நதி, பைரவர் சந்நதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோயில் கல்யாண மண்டபம் அமைக்கும் திருப்பணிகள் உபயதாரர்களால் நடந்து முடிந்துள்ளது. கொடிமரம் நட முயற்சித்த போது, அங்கு ஏற்கனவே கொடிமரம் இருந்த அடையாளத்தினை கண்டு பக்தர்கள் பரவசமுற்று மகிழ்ந்தனர்.

முன்னோரு காலத்தில் இங்கு ஒரு ஆலயம் இருந்திருக்க வேண்டும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். ஆடித்தபசு விழாவை முன்னிட்டு 10 நாள் திருவிழாவில் நாள்தோறும் இரவு 7.30 மணிக்கு தினசரி சப்பரம் எழுந்தருளல் நடைபெறும்.இந்த கோயிலை பொறுத்தவரை இங்கு வாழ்ந்த சித்தர் மகான், சங்கரன் கோவில் ஆடித் தபசு காட்சியை இங்கேயே மனக்கண்ணால் கண்டார் என்பது ஐதீகம். எனவே தபசுக்கு சங்கரன்கோவில் சென்றால்கூட, அந்த வழிபாடு நிறைவு பெற வேண்டும் என்றால் சின்னசங்கரன் கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலுக்கு வந்துதான் பிரார்த்தனையை முடிக்க வேண்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இதுபோலவே பலரும் பிராத்தனையை செய்து வருகிறார்கள்.

விவசாயம் மேம்படவும், நாள் பட்ட கடன் தீரவும், பிரிந்த தம்பதிகள் சேரவும், விஷ சந்துக்களிடம் இருந்து தப்பிக்கவும் இக்கோயில் வந்து தரிசனம் செய்யலாம். நேர்த்தி கடன் செலுத்தலாம்.

இக்கோயிலுக்கு வர நாங்குநேரி – சாத்தான்குளம் சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில் பேய்க்குளத்தினை அடையலாம். திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.காலை 6 மணியில் இருந்து 12 மணி வரையிலும் மாலை 5 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடைதிறந்து இருக்கும்.

Tags : Sankara ,Peykulam ,Satankulam ,Muthalankurichi Kamarasu Thoothukudi district ,Beykulam Bazaar ,
× RELATED நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்…