சென்னை: செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 42 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மேலமையூர் சக்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவர் சென்னையில் சுங்கத்துறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செவலியர் பயிற்சி பேராசியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் கடந்த 18ம் தேதி குடும்பத்துடன் கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதேபோல அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜான் (48), பேப்ரிகேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீபா (44), செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜான் தொழில் விஷயமாக கோவைக்குச் சென்றுவிட்டார். ஷீபா அவரது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். இவர்களது மகன் வேலைக்குச் சென்று விட்டார். ஷீபா வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 சவரன் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. கொள்ளை விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட ஆறுமுகம் மற்றும் ஷீபா ஆகிய இருவரும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் 42 சவரன் நகைகள், ரூ.5.75 லட்சம் கொள்ளை போனது அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இப்பகுதியில் இரவு நேர ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவதில்லை என காவல்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
