×

சகோதர உணர்வுமிக்க இந்தியா தான் இன்றைக்கு தேவை: நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் விழாவில் குடிலை திறந்து வைத்து, கேக் வெட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சகோதர உணர்வுமிக்க இந்தியா தான் இன்றைக்கு தேவை என்று நெல்லையில் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அன்பு நெறியை, பண்பு நெறியால் வகுக்க வேண்டும் என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி பாவங்களை மட்டுமே செய்யத் தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்.

சிறுபான்மையினர் நலன் மீது உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு கொண்டு வந்துள்ளது. திமுக ஆட்சி தான் சிறுபான்மையினர் நலன் காக்கும் பொற்காலம். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம். சிறுபான்மையினருக்கு செய்த திட்டங்களை ஒரு நாள் முழுக்க பட்டியலிட என்னால் முடியும். ராமநாதபுரத்தில் கடலாடி வட்டத்தில் உள்ள புனித யாக்கோபு தேவாலயம் ரூ. 1.42 கோடியில் சீரமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒற்றுமையாக வாழும் மக்களை பிரித்து வைக்க நினைக்கின்றனர். எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால், அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் அரசாக உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே அடையாளத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராக ஒருபுறம் சட்ட ரீதியாக போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் உங்கள் வாக்குரிமையை உறுதி செய்துகொள்ளுங்கள். துரோகம் செய்வதையும் மக்கள் நலனை அடகு வைப்பதையே லட்சியமாக செய்து வருகிறது அதிமுக. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது.

மதச்சார்பின்மை என்ற சொல்லை கேட்டாலே ஒன்றிய பாஜக அரசுக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது. மதச்சார்பின்மை என்ற சொல்லை அரசமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது. பாஜகவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் தன்மை தமிழ்நாட்டுக்கும் திமுகவுக்கும் உள்ளது. வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால் திமுகவினர் வீடுத் தேடி வந்து உதவி செய்வார்கள். மக்கள் தங்களது வாக்குகளை உறுதி செய்யவும் மறுபுறத்தில் திமுகவினர் துணையாக இருந்தனர்.

Tags : India ,Chief Minister MLA ,Christmas ,Paddy K. Stalin ,Nella ,Tamil Nadu ,K. Stalin ,Christian Goodwill Movement ,Christmas-Mass of Humanity ,
× RELATED எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான்...