×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, டிச. 20: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஊட்டியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீலகிரி மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அரசு ஊழியர் சங்க துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செவிலியர் மேம்பாட்டு சங்க மாநில துணை தலைவர் நல்கிஸ் பேகம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் அனிதா, செயலாளர் பிரீத்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மீதான மேல்முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும். எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காஞ்சனா, சரோஜினி தேவி உட்பட ஏராளமான செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Nurses Development Association ,Government Medical College Hospital ,Nilgiris District Tamil Nadu Nurses Development Association ,
× RELATED பூமியை நோக்கி வருகிறது வால் நட்சத்திரம்