×

பொன்னூர் தோட்டக்கலைப் பண்ணையில் புதிய பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

கூடலூர்,டிச.18: கூடலூர், பந்தலூர் சாலையில் நாடுகாணியை அடுத்த பொன்னூர் பகுதியில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது. இங்கு வாசனை திரவியங்களான மிளகு, கிராம்பு,ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி,எலுமிச்சை மற்றும் தேயிலை, காபி, பாக்கு மற்றும் பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ள இப்பகுதி வழியாக ஊட்டி மற்றும் கேரளா செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கிற்காக இப்பகுதியில் சுற்றுலா பூங்கா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

ஆரம்பத்தில் இப்பகுதியில் படகு இல்லம் மற்றும் பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. அதன் பின் வாசனை திரவிய பூங்கா அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு இங்கு வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டது. சில காலம் பூங்கா பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட செட்டுகளை கடமான்கள் புகுந்து அடிக்கடி உடைத்து சேதப்படுத்தியதால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் திட்டத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சூழல் சுற்றுலா பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் உள்ளது. தற்போது தோட்டக்கலைத் துறை சார்பில் இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறிய அளவிலான பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பிரதான சாலை ஓரத்தில் தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதால் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளதாகவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அப்பகுதியில் காபி ஷாப் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பூங்கா அமைந்தால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும் தங்கள் குடும்பத்தினரின் பொழுது போக்குகளுக்கு பூங்காவை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என உள்ளூவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Ponnur Horticultural Farm ,Gudalur ,Horticultural Department ,Ponnur ,Nadukan ,Pandalur Road ,
× RELATED ஸ்கூட்டர்-லாரி மோதி இளம்பெண் படுகாயம்