×

ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக குறைவு நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள்: ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேச்சு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எஸ்.ரமேசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் பணி நிறைவு விழா நடத்தப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.ரமேஷ், வரும் 27ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் நேற்று பிரிவு உபசாரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த ஆண்டில் 11 நீதிபதிகள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இது நீதித்துறை நிர்வாகத்தை நிச்சயமாக பாதிக்கும்.

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2016 அக்டோபர் முதல் இதுவரை 85 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு, கலைமகள் சபா வழக்கு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பாராட்டினார். நிகழ்ச்சியில், ஏற்புரையாற்றிய நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பழமையான இந்த உயர் நீதிமன்றம் நீதி வாழும் இடமாகவும், அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த நீதிமன்றத்தில் நாங்கள் தற்காலிக காவலர்கள். நீதி வழங்குவது மட்டுமல்லாமல் நீதிபதிகளுக்கு பொறுமை முக்கியம் என்பதை பதவிக்காலத்தில் உணர்ந்தேன் என்றார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பணி ஓய்வு பெறுவதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 53 ஆக குறைகிறது.

Tags : Judge ,M.S. Ramesh ,Chennai ,Madras High Court ,MS Ramesh ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...