×

சீசன் சமயங்களில் நெரிசலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போக்குவரத்து மேலாண்மை

ஊட்டி, டிச.19: ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக நிதியுதவியின் கீழ் ஊட்டியில் உள்ள லேம்ஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் இணைந்து ஊட்டியில் சீசன் சமயங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போக்குவரத்து மேலாண்மைக்கான புதிய முயற்சியை நீலகிரி காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதன் தொடக்க விழா ஊட்டியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது. லேம்ஸ் ஆட்டோமேஷன் நிறுவன ஆய்வாளர் ரோஷன் வரவேற்றார். இயக்குநர் ஆனந்த திட்டம் குறித்து விளக்கினார்.

மாவட்ட எஸ்பி நிஷா திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது,
‘நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க காவல்துறை பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பல்வேறு பி.டெக் கல்லூரி மாணவர்களை கொண்டு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆய்வு செய்யப்படுகிறது. ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக நிதியுதவியின் கீழ் லேம்ஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மாணவர்கள் பல குழுக்களாக பிரிந்து, ஊட்டி நகரில் ஸ்மார்ட் பார்க்கிங், க்யூஆர் கோடு மூலம் வாகன நிறுத்துமிடங்களை அறிவது, போக்குவரத்து இல்லாத சாலைகளை கண்டறிவது, வாகனங்களின் எண்ணை அறிவது ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள். அவர்களின் தரவுகளின் அடிப்படையில் போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்த தீர்வுகள் களத்தில் அமல்படுத்தி சோதனை செய்யப்படும், என்றார். இதில் ஊட்டி நகர போக்குவரத்து காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Union Ministry of Social Justice and Empowerment ,Lames Automation Company ,
× RELATED கூடலூர் நாடுகாணி ஜீன்பூல் சுழல்...