கோபி, டிச. 19: கோபி அருகே காரில் கடத்தப்பட்ட 11.500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோபியில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கோபி சப்- இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் கோபி அருகே உள்ள ஓலப்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 11.500 கிலோ எடையுள்ள 3,155 பாக்கெட் குட்கா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 51,800 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குட்கா கடத்திய கெட்டிசெவியூர் அருகே உள்ள கல்லுமடை மாடர்ன் சிட்டியை சேர்ந்த ஜோதிபிரசாத் மகன் கார்த்திக் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
