×

மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டில் ரூ.45.20 கோடி வரி வசூல்

ஈரோடு, டிச.17: ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டில் ரூ.45.20 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள ரூ.30.11 கோடியை வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இன வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2025-2026ம் நிதியாண்டில், மாநகராட்சியில் சொத்து, குடிநீர், குத்தகை இனங்களில் இதுவரை, 60 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம், 1 லட்சத்து 45 ஆயிரத்து 587 பேர் வரி செலுத்துகின்றனர். மாநகராட்சியில் 11 வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில், அதிகளவில் கிராமப்புறங்கள் உள்ளதால், அப்பகுதிகளில் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 2025-2026ம் நிதியாண்டில் வரி ரூ.75.31 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.45.20 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.30.11 கோடி வரி நிலுவையில் உள்ளது. இந்த வரியை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 60 சதவீத வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீத வரியை வசூலிக்கும் பணியில், 40 பில் கலெக்டர்கள், 60 பணியாளர்கள் என 100 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், 2024-2025ம் நிதியாண்டில் 9 ஆயிரம் பேர் தங்களது வரிகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதன் மூலம், ரூ.9.15 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வரியையும் வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வரி வசூலே பிரதானமாக இருந்து வருகிறது. 100 சதவீதம் வரிவசூலை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த சில நாட்களாக பில் கலெக்டர்கள், பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முறையாக தங்களது வரிகளை செலுத்தி, மாநகராட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆணையர் அர்பித் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Erode ,Erode Municipality ,Sotuvari ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்