- தேசிய அனர்த்த நிவாரணப் படை
- ஈரோடு ரயில் நிலையம்
- ஈரோடு
- சேலம் பிரிவு
- தெற்கு ரயில்வே
- தேசிய பேரிடர் மீட்பு படை…
ஈரோடு, டிச. 19: ஈரோடு ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம், தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து நேற்று ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை மூலமாக ரயில் விபத்துகள் குறித்த வழக்கமான கூட்டங்களும், ஒத்திகை பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக ரயில்வே ஊழியர்களின் திறனை மேம்படுத்துவது மற்றும் அதன் இயக்கங்கள் பற்றி புரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி ஒத்திகைகள் உதவுகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலையத்தில் கூட்டு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதனை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டார். இதில், விபத்து போன்ற சூழல் உருவாக்கப்பட்டு ஒரு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டால் அதனை எப்படி மீட்பது மற்றும் சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஒத்திகை மூலமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில், பெட்டிகள் தடம் புரண்டவுடன் ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிப்பது, அவர் உடனடியாக கோட்டத் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிப்பது, அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக ரயில்வே கோட்ட மேலாளர், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் பிற அலுவலர்களை தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரச் செய்து பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகள் ஒத்திகை மூலம் செய்து காண்பிக்கப்பட்டன.
இந்த கூட்டு ஒத்திகை பயிற்சியில், ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால், கோட்ட பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் ரயில்வே துறையினர் பங்கேற்றனர்.
