×

கடை ஞாயிறு விழாவில் ரூ.4.15 லட்சம் உண்டியல் காணிக்கை 34 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி கிடைத்தது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில்

ஒடுகத்தூர், டிச.19: பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிம்ம குளம் திறப்பு மற்றும் கடை ஞாயிறு திருவிழாவில் ரூ.4.15 லட்சம், 34 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் சிம்மக்குளம் திறப்பு மற்றும் கடை ஞாயிறு விழா கடந்த 13, 14ம் தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இந்த, விழாவில் சிம்மகுளம் திறப்பின்போது திருமணமாகி குழந்தை பேறு இல்லாத ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

மேலும், அடுத்த நாள் கடை ஞாயிறு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். அப்போது, கடந்த வருடம் குழந்தை வரம் வேண்டி நிறைவேறிய பக்தர்கள் பலா மரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திகடனை செலுத்தினர். அதே போல், இந்தாண்டும் ஏராளமான ஆண், பெண்கள் திருமணம் நடைபெற வேண்டி பெண் பனை மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்தனை செய்தனர். அப்போது பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கைகளை கோயிலில் வைக்கப்பட்டு இருந்த 22 உண்டியல்களில் செலுத்தியிருந்தனர். இதையடுத்து கடை ஞாயிறு விழாவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணுவதற்காக, ஆய்வர் அனிதா மற்றும் செயல் அலுவலர் பிரியா தலைமையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து காணிக்கைகளை கணக்கிடும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் சேவார்த்திகள் ஈடுபட்டனர். நிறைவாக ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்து 352 ரொக்க பணம் மற்றும் 34 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக செயல் அலுவலர் பிரியா தெரிவித்தார்.

Tags : Virinchipuram Markapandiswarar temple ,Kadai Sunday festival ,Odugathur ,Simha Kulam ,Pallikonda ,Vellore district ,Pallikonda… ,
× RELATED புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர்...