- எடப்பாடி
- பாஜா
- நிலை
- Kolatur
- ஸ்டாலின்
- பெரம்பூர்
- திமுகா
- கே. ஸ்டாலின்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை கொளத்தூர்
- தொகுதியில்
- ஜி.கே.எம்
பெரம்பூர்: 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் எதிரிக்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார் என்றார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம். குடியிருப்பு ஜம்புலிங்கம் சாலையில் மாநகராட்சி சார்பில், 25.72 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் இந்த திருமண மண்டபத்தில் முதற்கட்டமாக 15 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை பொருட்களையும் வழங்கி பேசியதாவது; கொளத்தூருக்கு வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும். உற்சாகம் வந்துவிடும். வேகம் வந்துவிடும். புத்துணர்ச்சி வந்து விடும். அதிலும் மணவிழா இது. மணமக்களுடன் நாம் பங்கேற்று அவர்களை வாழ்த்தும் விழாவாக இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. நம் குடும்பத்தில் ஒரு திருமண விழா நடந்தால் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதைபோல, நான் மட்டும் அல்ல, அமைச்சர்கள் மட்டுமல்ல அனைவரும் அந்த உணர்வோடுதான் பங்கேற்றுள்ளோம்.
யாராவது கொளத்தூர் என பெயர் சொன்னாலே, அது சாதனை; இல்லையென்றால் ஸ்டாலின் என்றே ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு இந்த தொகுதியில் நான் இரண்டற கலந்துள்ளேன். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதியில் நிறைவேற்றி கொளத்தூர் தொகுதியை அமைச்சர் நேரு சொன்னது போல் பெருமையாக மாற்றியுள்ளோம். அவர், 234 தொகுதியில் இந்த தொகுதியை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பொறாமையாகவும் உள்ளது’ என்றார். அது கெட்ட எண்ணத்தில் அல்ல, நல்ல எண்ணத்தில் தான். ஒரு மாவட்டத்துக்கு மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை போவேன். ஆனால் கொளத்தூருக்கு மட்டும் 10 முறை வந்து விடுவேன். ஓய்வெடுக்கலாம் என்று நினைத்தால் சேகர்பாபு விடமாட்டார். ஒரு பட்டியலுடன் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்பே வாட்ஸ்அப்பில் ஒரு பட்டியலை அனுப்புவார். நான் ஷாக் ஆகிவிடக்கூடாது என்பதற்காக முன்பே எனக்கு அனுப்பிவிடுவார். அதில் பெரிய பட்டியலே இருக்கும். அப்படி கொடுத்து, நான் அந்த நிகழ்ச்சிக்கு வந்தால் எனக்கும் ஒரு திருப்தி ஏற்படும். ஆக 10 நாளுக்கு ஒரு முறை வந்தால் தான் எனக்கு முழு திருப்தி ஏற்படும். பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம், பொது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தரும் மகிழ்ச்சியை விட, இந்த கொளத்தூர் தொகுதியில் பெறும் மகிழ்ச்சியே சிறப்பு.
சாலையில் இரண்டு புறமும் மக்கள் நிற்கிறார்களே நான் இறங்கட்டுமா என சேகர்பாபுவிடம் கேட்பேன். அவர் வேண்டாம் என்பார். தற்போது அமைச்சர் உடல்நலம் பாதித்துள்ளார்.
இருந்தாலும் இன்று நான் அவரிடம் சொல்லாமல் காரைவிட்டு இறங்கிவிட்டேன். என்னால் மக்களை பார்க்கும்போது கட்டுப்படுத்த முடியவில்லை. எப்போதுமே நான் அடிக்கடி சொல்வதுண்டு. இந்த தொகுதியை பொறுத்தவரை எப்போதும் நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செல்லப்பிள்ளையாக நல்ல பிள்ளையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன் என்று நம்புகிறேன். நீங்கள் அந்த எண்ணத்துடன் தான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்த தொகுதியில் ஏற்படுத்தியுள்ள திட்டங்களை பார்க்கும்போது இன்று மட்டுமல்ல என்றைக்குமே மக்கள் மனதில் பதியும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எடுத்துக்காட்டாக கொரோனா காலக்கட்டத்திற்கு பின் பணிச்சூழல் மாறிவிட்டது. குறிப்பாக ஐ.டி, தொழில் துறையில் வேலை பார்ப்போர், வீட்டில் வேலை செய்கின்றனர். பல தொழில் முனைவோர் உருவாகியுள்ளனர். அவர்களுக்காக உருவானதுதான் முதல்வர் படைப்பகம். கொளத்தூர் மட்டுமல்ல சுற்றியுள்ள பல தொகுதியில் அரசு மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதை குறைக்கவேண்டும் என்பதற்காக ஏற்கனவே செயல்பட்டு வந்த பெரியார் நகர் மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி பெரிய மருத்துவமனையாக உருவாக்கி ஸ்டான்லி, ராஜீவ்காந்தி மருத்துவமனையைவிட, கிண்டி அரசு மருத்துவமனையைவிட பெரியார் நகர் அரசு மருத்துவமனை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் என்றாலே வண்ணமீன் தான் ஞாபகம் வரும். வண்ணமீன் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தர எண்ணி, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப எல்லா துறையுடனும் கலந்து பேசி, சட்ட சிக்கல்களை கடந்து வெளிநாட்டில் கூட இப்படி ஒரு மையம் இருக்குமா என்ற அளவுக்கு வண்ண மீன் வர்த்தக மையம் உருவாக்கியுள்ளோம். மினி ஸ்டேடியம் கட்டியுள்ளோம். கொளத்தூரில் உள்ள ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர எண்ணி, அரசு வேலைக்கு ஏற்கனவே பல லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், நீங்களும் காத்திருக்கவேண்டாம் என்று எண்ணி, மாணவர்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் அளவுக்கு கல்விச்சோலை உருவாக்கி வேலை கிடைக்க பல திட்டங்களை உருவாக்கியுள்ளோம். தொகுதியில் பலதிட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். கொளத்தூரில் திரும்பிய பக்கமெல்லாம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கொளத்தூரில் இன்று புதிய பள்ளி கட்டடம், அங்காடி கட்டடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்துள்ளோம். கொளத்தூருக்கு ஒரு சிறப்பு உண்டு. மாநகராட்சி பள்ளி, மருத்துவமனை, நூலகம், திருமண விழா என எல்லாமே கொளத்தூரில்தான் அதிகம். அந்தளவு நம் திட்டங்களை சாதனைகளை இந்த தொகுதியில் செயல்படுத்தியுள்ளோம். இன்று 15 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கிறோம். நம் ஆட்சி வந்தபின் பெண்களுக்குத்தான் அதிக திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பெண்களை முன்னேற்றினால் அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் நினைத்தால் எதையும் செய்வர். அதனால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் தான் இருப்பார். என் வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான். நான் மட்டுமல்ல, சேகர்பாபு, நேரு யாராக இருந்தாலும் அப்படித்தான். ஓராண்டு காலம் நான் மிசாவில் இருந்த போது என் மனைவி பொறுமையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தினார். அதே போல்தான் ஒவ்வொருவரும் இருந்துள்ளனர். மணமக்களிடம் நான் கேட்பது என்னவென்றால், பொண்டாட்டி சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த வகையில் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக நடத்தவேண்டும். முன் 16 பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பர். ஆனால் தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்கிறேன். முன் நாம் இருவர்; நமக்கு ஒருவர். படிப்படியாக குறைந்து, நாம் இருவர் நமக்கு ஒருவர். வருங்காலத்தில் நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர் என்று மாறலாம். 16 பெற வேண்டும் என்பதை மணமக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அது 16 செல்வங்களை குறிக்கும். குழந்தைக்கு தமிழ் பெயர்களை சூட்டி, வீட்டுக்கு விளக்காய் நாட்டுக்கு தொண்டனாய் வாழ வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். இதன்பின்னர் நிருபர்களுக்கு முதல்வர் பேட்டி அளித்தார்.
100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கிறாரே? இபிஎஸ் எப்போதும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பார். ஆனால் இந்த விவகாரத்தில் திமுக போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது. மடிக்கணினி தொடர்பான கேள்விக்கு, ‘’எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் எதிரிக்கட்சி தலைவராக உள்ளார்’ என்றார். எஸ்ஐஆர் குறித்தான கேள்விக்கு, ‘’வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்பு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், மண்டலகுழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கலந்துகொண்டனர். முன்னதாக, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 17.47 கோடி மதிப்பீட்டில் ஜி.கே.எம் குடியிருப்பில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, பெரியார் நகர் அமுதம் அங்காடி ஆகிய புதிய திட்டப்பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
