×

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கொட்டிய மழை: மகிழ்ச்சியில் விவசாயிகள்

 

 

ராமநாதபுரம்: மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி ராமேஸ்வரத்தில் 27 மி.மீ, மண்டபத்தில் 23. 40 மி.மீ, தங்கச்சி மடத்தில் 33 மி.மீ, ராமநாதபுரத்தில் 22 மி.மீ, தொண்டியில் 19 மி.மீ, ஆர்.எஸ்.மங்கலத்தில் 14.40 மி.மீ, கமுதியில் 22 மி.மீ, முதுகுளத்தூரில் 25.40 மி.மீ, கடலாடியில் 13 மி.மீ என மாவட்ட முழுவதும் 264.20 மி.மீ, சராசரியில் 16.51 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழையின் காரணமாக ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீரானது குளம் போல் தேங்கி, பெருக்கெடுத்து ஒடியதால் சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அன்றாட பணிகளுக்கு செல்வோர் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகினர். அரசு மருத்துவமனை சாலை, பாரதி நகர், பழைய பேருந்து நிலையம், அரசு பணிமனை, ரயில்வே மேம்பால பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகமான மழை நீர் தேங்கி நிற்கிறது. மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தலையிட்டு மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வெளியூர் செல்லும் பயணிகள் நனைந்தபடி பஸ்களில் ஏறி சென்றனர். ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த தொடர் மழைக்கு நெல் பயிர்களுக்கு உரமிட்டு, கடந்த சில நாட்களாக போதிய தண்ணீரின்றி காத்திருந்த நிலையில் தற்போது மழை பெய்ததால், பயிர்கள் நன்றாக வளரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி செல்லாத சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை வெளியேற வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் பயணிகள் இன்றி காலியாக சென்றது. சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

Tags : Ramanathapuram ,Ramanathapuram district ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...