- கலைஞர்
- விளையாட்டு பல்கலைக்கழகம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- புது தில்லி
- தமிழ்நாடு அரசு
- கலைஞர் பல்கலைக்கழகம்
- கும்பகோணம்
புதுடெல்லி: கும்பகோணத் தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, முதலமைச்சர் வேந்தராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் இணைவேந்தராகவும் செயல்படுவார்கள் என்றும், தேடுதல் குழு மூலம் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஒன்றிய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு வாயிலாக நிதி பெறவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழக மசோதா மற்றும் விளையாட்டு பல்கலைகழக மசோதா ஆகிய இரண்டு மசோதக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை திமுக எம்பி டி.ஆர்.பாலு, துரை வைகோ, செல்வராஜ், சு.வெங்கடேசன், நவாஸ்கனி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகிய ஆறு கட்சிகளின் எம்பிக்கள் கூட்டாக சென்று குடியரசு தலைவரின் செயலாளரிடம் நேற்று கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் டெல்லியில் கூட்டாக அளித்த பேட்டியில், ‘‘கலைஞர் பல்கலைக்கழக மசோதா மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மசோதா ஆகியவை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் கொடுத்துள்ளோம். அரசியல் சாசனத்திற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். இல்லையென்றால் அவரை ஒன்றிய அரசு திருப்பப்பெற வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
