×

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்ட மலைமீது புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜை: அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில், புனிதநீர் தெளித்து பிராயசித்த சிறப்பு பூஜை நேற்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கடந்த 3ம் தேதி 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்த மகாதீபம், கடந்த 13ம் தேதி இரவுடன் நிறைவடைந்தது.

திருவண்ணாமலை மலைமீது காட்சியளித்த மகா தீபத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், மலையில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  எனவே, மகாதீபம் ஏற்றும் திருப்பணியில் ஈடுபட்டோர், நெய், திரி போன்றவற்றை கொண்டு செல்லும் திருப்பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலை சுயம்பு வடிவான இறைவனின் திருமேனியாகும். எனவே, அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறை வடிவமான மலைமீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது. எனவே, மகாதீபம் ஏற்றும் திருப்பணிக்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலைமீது சென்றதற்கான பிராயசித்த வழிபாடு ஆண்டுதோறும் தீபத்திருவிழா முடிந்ததும் நடப்பது வழக்கம்.

அதன்படி, மலை மீது நேற்று புனித நீர் தெளித்து பிராயசித்த வழிபாடு நடந்தது. அப்போது, `உம்முடைய திருப்பணியை நிறைவேற்றவே மலைமீது சென்றோம், எங்களை பொறுத்தருள்க’ என வேண்டி மலை உச்சியில் அமைந்துள்ள சுவாமி பாதத்தில் வழிபாடு நடத்தப்பட்டது.

அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீர், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்சிதரும் அண்ணாமலையார் பாதம் மற்றும் மகாதீப கொப்பரை வைக்கப்படும் இடம் ஆகியவற்றில் புனித நீர் தெளித்து பிராயசித்த பூஜைகள் செய்யப்பட்டன.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai Tiruvannamalai ,Tiruvannamalai ,Mahadipam ,Tiruvannamalai Annamalaiyar Temple Karthigai Temple ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...