ராஜபாளையம், டிச. 18: ராஜபாளையத்தில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகன் மகேஷ்(43). இவர் டெக்ஸ்டைல் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் கம்பெனிக்கு செல்வதற்காக பைக்கில் நாயுடு சாவடி அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் தர்(24) என்பவர் பைக்கை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததை கண்டு தர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து மகேஷ் தளவாய்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
