வாஷிங்டன்: வெளிநாட்டினர் நுழைவு கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தி வலுப்படுத்தும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இதன்படி, மேலும் 15 நாடுகள் மீது பகுதியளவு கட்டுப்பாடுகளையும், நுழைவு வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பெனின், கோட் டி ஐவோர், டோமினிகோ, காபோன், காம்பியா, மலாவி, மவுரித்தேனியா, நைஜீரியா, செனகல், தான்சானியா, டோங்கா, சாம்பியா மற்றும் ஜிம்பாவே ஆகிய 15 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய 5 நாடுகளின் குடிமக்கள் மீது முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பாலஸ்தீனிய அதிகார சபையால் வழங்கப்பட்ட பயண ஆவணங்களை கொண்ட நபர்கள் மீதும் முழுமையான கட்டுப்பாடுகளும், நுழைவு வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பகுதி நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த லாவோஸ் மற்றும் சியாரா லியோன் மீது தற்போது முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புருண்டி, கியூபா, டோகோ மற்றும் வெனிசுலா நாடுகளின் குடிமக்கள் மீதான பகுதி நேரக் கட்டுப்பாடுகள் தொடர்கிறது.
வெனிசுலா எண்ணெய் டேங்கர்கள் சுற்றிவளைப்பு: வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் வெனிசுலா முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெனிசுலாவுக்கு செல்லும் அனைத்து எண்ணெய் டேங்கர்களையும் முற்றுகையிடவும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
