×

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடிக்கு ‘நிஷான்’ விருது

அடிஸ் அபாபா: பிரதமர் மோடி தனது இரண்டு நாள் ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு முதல் முறையாக நேற்று எத்தியோப்பியா சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத அலியுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றிய உலகின் 18வது நாடாளுமன்றமாகும்.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ளது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இந்தியாவும் எத்தியோப்பியாவும் இயல்பான கூட்டாளிகள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலமாக பரஸ்பர பாதுகாப்புக்கான நமது அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெற்றது. இது நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. இந்தியா-எத்தியோப்பியா காலநிலையில் மட்டுமல்ல. உணர்விலும் ஒருவித உணர்விலும் நெருக்கத்தை பகிர்ந்து கொள்கின்றன. இருநாடுகளின் மூதாதையர்கள் வெறும் பொருட்களை மட்டுமல்லாமல் கருத்துக்களையும், வாழ்க்கை முறைகளையும் கூட பரிமாறிக்கொண்டனர். வளரும் நாடுகளாக இந்தியாவும், எத்தியோப்பியாவும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் , வழங்குவதற்கும் நிறைய உள்ளன” என்றார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியர்கள் பாடிய வந்தே மாதரம்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது எத்தியோப்பிய பாடகர்களால் வந்தே மாதரம் பாடல் அற்புதமாக பாடப்பட்டது. பிரதமர் மோடி இதனை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் பிரதமர், ‘‘நாம் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எத்தியோப்பிய பாடகர்களால் வந்தே மாதரம் பாடல் அற்புதமாக பாடப்பட்டது. இது மனதை ஆழமாக உருக்கும் தருணமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் சென்றடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தின் இறுதிகட்டமாக 2 நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றடைந்தார். மஸ்கட் விமான நிலையத்தில் ஓமன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சயீத் அவரை அன்புடன் வரவேற்றார். அதை ெதாடர்ந்து ஓட்டலுக்கு சென்ற போது அங்கு ​​இந்திய சமூக உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர்.

பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே நேரத்தில் இல்லை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாளையுடன் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. பிரதமர் மோடி டிச.15 முதல் 18ஆம் தேதி வரை வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதே போல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி டிச.16 முதல் டிச.20 வரை ஜெர்மன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் நாடாளுமன்றம் நடந்து வரும் சூழலில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே நேரத்தில் தற்போது இல்லை.

Tags : Modi ,Ethiopia ,Addis Ababa ,Jordan ,Abi Ahmed Ali ,
× RELATED கடற்படை முற்றுகையால் போர் பதற்றம்;...