×

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு சிக்கிய விவகாரம் மக்களவை செயலாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த மார்ச் 14ம் தேதி டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக ஏற்கனவே நடத்தப்பட்ட நீதித்துறை உள்விசாரணையில், அந்தப் பணம் நீதிபதியின் மறைமுக அல்லது நேரடி கட்டுப்பாட்டில் இருந்ததாக கண்டறியப்பட்டு, அவரை பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை ரத்து செய்ய கோரி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட மூன்று நபர் விசாரணைக் குழு சட்டவிரோதமானது எனக் கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்களவை சபாநாயகர் மட்டும் தன்னிச்சையாக இந்த குழுவை அமைத்தது தவறு என்றும், மாநிலங்களவை தலைவருடன் இணைந்து கூட்டாகவே குழுவை அமைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் வாதாடப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு, தற்போதைய விசாரணைக் குழுவின் அமைப்புமுறை சட்டப்படி சரியானதா என்பது குறித்து முறையான விளக்கம் அளிக்குமாறு மக்களவை பொதுச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Lok Sabha ,New Delhi ,Allahabad High Court ,Judge ,Yashwant Verma ,Delhi ,
× RELATED லோக்ஆயுக்தா திடீர் சோதனை கர்நாடக அரசு...