- ED
- சோனியா காந்தி
- ராகுல் காந்தி
- தேசிய ஹெரால்டு
- தில்லி
- புது தில்லி
- அமலாக்க இயக்குநரகம்
- அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுத்து விட்டது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மறைந்த மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கார் பெர்னாண்டஸ் மற்றும் சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியன் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்து நீதிபதி விஷால் காக்னே நேற்று உத்தரவிட்டார். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இல்லாமல், தனி நபர் புகாரின் அடிப்படையில் மட்டுமே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியிருப்பதால் குற்றப்பத்திரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபரில்தான் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். எனவே, குற்றப்பத்திரிகை நிராகரிப்பு இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
* மோடி அரசின் சட்டவிரோத செயல் அம்பலாகிவிட்டது
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோடி அரசின் சட்டவிரோத செயல் அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி விடுத்த அறிக்கையில், ‘‘மோடி அரசின் சட்டவிரோத செயலும், அதன் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு பதிவும் முழுமையாக அம்பலமாகி உள்ளது. அமலாக்கத்துறையின் வழக்கு, அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் எந்த வழக்கும் இல்லை. இதில் எந்த பணமோசடியும் நடக்கவில்லை, குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் இல்லை, சொத்து பரிமாற்றம் இல்லை. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். அவை இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.
* புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குற்றப்பத்திரிகை மட்டுமே ஏற்கப்படவில்லை, மற்றபடி இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டவில்லை. இந்த விவகாரத்தில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சார்பில் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிபதி உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்வது தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் அல்லது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் அறிவுரை கேட்டு அதன்படி முடிவெடுக்கப்படும்’’ என்றார். அமலாக்கத்துறை புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் சில கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
* இது முக்கிய தீர்ப்பு
காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு முக்கியமானது. ஏனெனில் ஒரு வழக்கில் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் குறைந்தபட்ச விஷயம். அதிலேயே நிராகரிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கு தகுதியற்றது என அர்த்தம்’’ என்றார்.
