பாஸ்டேக் இனி கிடையாது ஏஐ டிஜிட்டல் சுங்கச்சாவடி வருது
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நெடுஞ்சாலை மேலாண்மை ஆகியவை 2026ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் நிறைவு செய்யப்படும். இது செயல்படுத்தப்பட்ட பின் பயணிகள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரமானது முற்றிலுமாக நீக்கப்படும். புதியதொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலானதாக இருக்கும். பயணிகள் இனி சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியது இல்லை. சுங்கக்கட்டணம் செலுத்த பாஸ்டேக் தேவையில்லை. இது ரூ.1500கோடி மதிப்புள்ள எரிப்பொருளை சேமிப்பதற்கு உதவும். அரசு வருவாயில் ரூ.6000கோடியை சேர்க்கும்” என்றார்.
இ சிகரெட்டுக்கள் முழுவதுமாக தடை
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்து மூலமாக அளித்த பதிலில், ‘‘இ சிகரெட்டுக்களின் உற்பத்தி, தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை மின்னணு சிகரெட்டுகள் தடை சட்டம் 2019ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட அமலாக்க முகமைகளிடம் உள்ளது. போதைப்பொருள் கலக்கப்பட்ட இ சிகரெட் மற்றும் வேப் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான எந்த வழக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவால் பதிவு செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கவாச் அமைப்பு பணிகள் மும்முரம்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘கவாச் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த கவாச் சிக்கலான(complex) அமைப்பாகும். இது தண்டவாளங்கள் முழுவதும் ஆப்டிகல் பைபர் கேபிள் பதிப்பது மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவது உட்பட ஐந்து முக்கிய அமைப்புக்களை உள்ளடக்கியதாகும். இந்திய ரயில்வே 7129 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓஎப்சி கேபிள்களை பதித்துள்ளது. 860 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவியுள்ளது. 767 நிலையங்களை தரவு மையங்களுடன் இணைத்துள்ளது. 3413கி.மீ. தூரத்துக்கு தண்டவாள உபகரணங்கை நிறுவியுள்ளது. 4154 இஞ்சின்களில் கவாச் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. 40ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
43 ஒடிடி தளங்களுக்கு தடை
மக்களவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சட்டத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் ஒளிபரப்பக்கூடாது என்ற கடமை ஒடிடி தளங்களுக்கு உள்ளது. தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021ன் பகுதி3ன் விதிகளின் கீழ் ஒடிடி உள்ளடக்கம் ஒழுங்குப்படுத்தப்படுகின்றது. ஆபாசமான உள்ளடக்கத்தை காட்சிப்படுத்தியதற்காக 43 ஒடிடி தளங்களுக்கான அணுகலை அரசு முடக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்
மாநிலங்களவையில் ரத்து மற்றும் திருத்த மசோதா 2025ஐ அறிமுகப்படுத்தி பேசிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ‘‘வழக்கற்றுப்போன சட்டங்களை நீக்குவது, சட்டமியற்றும் செயல்பாட்டின்போது ஏற்பட்ட பிழைகளை திருத்துவது மற்றும் சில சட்டங்களில் உள்ள பாகுபாடான அம்சங்களை நீக்குவது ஆகியவற்றை இந்த மசோதா நோக்கமாக கொண்டுள்ளது. குடிமக்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், வாழ்வாதாரத்தை எளிதாக்குவதற்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். காலாவதியான மற்றும் வழக்கற்றுப்போன 71 சட்டங்கள் ரத்து செய்யவும் அல்லது திருத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது” என்றார்.
