வேலூர், டிச.17: வேலூர் மாவட்டத்தில் மழையால் வேர்க்கடலை பயிர் பாதித்த விவசாயிகளக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். வேலூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இதில் வேலூர் கோட்டத்துக்குட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது: காட்பாடி கோரந்தாங்கல் பகுதியில் சுடுகாட்டு வழிப்பாதை சீரமைக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்யும் பெண்களுக்கு மானியம் வழங்குவதை போல், ஆண்களுக்கும் மானியம் வேண்டும். பயிர்களுக்கான மானிய விவரம் தெரிவித்தால் அதற்கு ஏற்றவாறு விவசாயிகள் நஷ்டம் அடையாமல் பயிரிடுவார்கள். சத்துவாச்சாரி பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் மழையால் வேர்க்கடலை பயிர் பாதித்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
காட்பாடி தாலுகாவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில், பயிரிடப்பட்ட பயிர்கள் சாலையோர மின்விளக்குகளின் வெளிச்சம் பட்டு சரியாக வளர்வதில்லை. இதை ஆய்வு செய்ய வேண்டும். மானாவாரி கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள், விளைச்சல் இல்லாததால் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மகிமண்டலம் பகுதியில் கல்குவாரி அமைக்க கூடாது. கணியம்பாடி பகுதியில் 24 ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை. கல்குவாரியில் இருந்து கல்குவாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
