×

அரசியல் கூட்டங்களை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல் திருமண மண்டபம், கூட்டரங்கம் உரிமையாளர்கள்

வேலூர், மார்ச் 17: திருமண மண்டபம், கூட்ட அரங்கம் தங்கும் விடுதி உரிமையாளர்கள் அரசியல் கூட்டங்களை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரவிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார். வேலூர் மாவட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமி பேசியதாவது: திருமணக்கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தினை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, புடவை வேட்டிகள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால் அதனை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களைக் கூட்டி உணவு பொட்டலங்கள் மற்றும் சாப்பாடு பந்தி பரிமாறுதல் போன்றவை ஏதும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அது குறித்த தகவலை உடன் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும்போது அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொரித்த தட்டிகள், கட்டவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரித்தல் கூடாது.

தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் வாடிக்கையாளர்களின் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும் ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாளன்று வெளி மாநிலத்திலிருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கியிருப்பவர்களை வெளியேறச் செய்ய வேண்டும். குழுவாக தங்க அனுமதிக்கப்படுபவர்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பட்டாசு பொருட்களையோ வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. திருமண மண்டபங்களில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு திருமணம், மற்றும் கூட்ட அரங்க உரிமையாளரும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்கள் கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vellore ,Collector ,Subbulakshmi ,
× RELATED ரொக்கப்பணம்கொண்டுசெல்லவரம்புரூ.5லட்சமாகஉயர்த்தவேண்டும்வேலூரில்வணிகர்சங்கதலைவர்விக்கிரமராஜாபேட்டி...