×

சையத் முஷ்டாக் அலி டி20பைனலில் மோதுவது யார்..? இன்று சூப்பர் லீக் 4 போட்டிகள்

புனே: உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் புனே நகரில் இன்று நடைபெற உள்ளன. சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில், 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்த போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்தியப்பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு 1ல், மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன. இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இரு பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள், இறுதிப் போட்டியில் மோதும். அந்த வகையில், சூப்பர் லீக் சுற்றின் கடைசி போட்டிகள் இன்று புனே நகரில் நடைபெற உள்ளன.

இன்று காலை 9 மணிக்கு நடக்கும் முதல் சூப்பர் லீக் போட்டியில் மத்தியப்பிரதேசம் – பஞ்சாப் அணிகள் களம் காண உள்ளன. பின்னர், காலை 11 மணிக்கு நடக்கும் 2வது போட்டியில் மும்பை-ராஜஸ்தான் அணிகளும், பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் 3வது போட்டியில் ஆந்திரா- ஜார்க்கண்ட் அணிகளும், பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டியில் ஐதராபாத்-அரியானா அணிகளும் மோதவுள்ளன. இதன் முடிவில், இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் 18ம் தேதி பிற்பகல் 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் மோதி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும்.

Tags : Syed Mushtaq ,Ali T20 ,Super League 4 ,Pune ,Super League ,Syed Mushtaq Ali T20 Cup ,Syed Mushtaq Ali Cup ,
× RELATED நான்காவது டி20 போட்டியில் இன்று...