சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரு சவரன் (8 கிராம்) 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: உலகப் பொருளாதார மாற்றங்கள், போர் பதற்றங்கள், வர்த்தகப் போர்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிக அளவில் வாங்கி வருகின்றனர். சாமானிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். வங்கி வைப்பு நிதியை விட தங்கம் அதிக லாபம் தருவதால் இந்த போக்கு உருவாகியுள்ளது.
இதனால் வரும் காலங்களில் தங்கம் விலை இன்னும் உயரும். விலை சிறிது குறையலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக உயர்வே நீடிக்கும். வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. முன்பு வெள்ளி முதலீட்டுப் பொருளாக மட்டுமே இருந்தது. இப்போது லித்தியம் பேட்டரி, சோலார் பேனல், எலக்ட்ரிக் வாகனங்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் போன்றவற்றுக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் தேவை அதிகரித்துள்ளது. எனவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயரும். என்று ஜெயந்திலால் சலானி தெரிவித்தார். இதனால் நகைப் பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
