×

கேரம் உலகக்கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், மாலத்தீவில் நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும், சென்னையில் நடைபெற்ற எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.

மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி, காசிமாவுக்கு ரூ.50 லட்சம், மித்ராவுக்கு ரூ.40 லட்சம் என மொத்தம் ரூ.1.90 கோடி வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீர்த்தனா மற்றும் காசிமா ஆகியோருக்கு உரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் இன்று வழங்கி, வாழ்த்தி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் 9.12.2025 முதல் 14.12.2025 வரை சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் – ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர். டெல்லியில் 9.12.2025 அன்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Keram World Cup ,First Minister ,K. ,Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,7th Keram World Cup ,Maldives ,Presidential Secretariat ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்