திருச்சி, டிச.15: தேசிய தேர்வு முகமையின் ஸ்வயம் தேர்விற்கு திருச்சியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் தேர்வு எழுத 384 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேசிய தேர்வு முகமை என்பது ஒன்றிய உயர்கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகமை ஆகும். இதன் வாயிலாக தேசிய உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும். எடுத்துக்காட்டாக மருத்துவ படிப்பிற்கான நீட் (தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வு), இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகள் பயில ஜேஇஇ தேர்வு (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு), யுஜிசி நெட் (பல்கலை. மானிய குழு, தேசிய தகுதி தேர்வு) உதவி பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கல் தேர்வு ஆகியவற்றை நடத்தும்.
ஆயிரக்கணக்கான தேர்வுகளை அந்தந்த நகரங்களில் தேர்வு மையங்களில் கையாள இந்த முகமை வழிவகை செய்கிறது. தேசிய தேர்வு முககை சார்பில் ஸ்வயம் தேர்வும் நடத்தப்படுகிறது. ஸ்வயம் என்பது இளம் மனதிற்கு கல்வி பயில தேவையான தரவுகளை, வளங்களை இணைய விழயில் அளிப்பது ஆகும். இந்திய மாணவர்கள் இணைய வழியில் கல்வி பயில உள்ள தடைகளை இது நிவர்த்தி செய்கிறது. 9ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை அறிவியல், மனிதநேயம், பொறியியல், மேலாண்மை போன்ற பல பாடங்கள் விரிவான இணை வழி பாடங்களாக, இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் இருந்து தலைசிறந்த ஆசிரியர்கள் அளிக்கும் பயிற்சி வகுப்புகள் காணொளி வாயிலாகவும், ஒலியாகவும், தகவல்களாக அடக்கப்பட்ட தாள்களிலும், கருத்து பரிமாற்றம் செய்ய தளமும் பதிவு செய்யப்பட்டும். இந்த ஸ்வயம் தேர்வு எழுதி தேர்ச்சி பெருவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும், அதன் வாயிலாக வேலைவாய்ப்பு பெற தேவையான வழிகாட்டல்கள் கிடைக்கப்பெறும். இந்த ஸ்வயம் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் 2 பருவத் தேர்வுகளாக நடத்தப்படுகிறது.
முதல் பருவம் ஜனவரி முதல் மே மாதம் வரையும் நடைபெறும் அதன் பிறகு முதல் பருவ தேர்வும், ஜூலை முதல் நவம்பர் வரை இரண்டாம் பருவமும் டிசம்பர் மாதம் 2ம் பருவ தேர்வும் நடைபெறும். அந்த வகையில் ஸ்வயம் தேர்வு கடந்த டிச.11ம் தேதி தொடங்கி டிச.16ம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சியில் அரியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும், எ.புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும் நடைபெறுகிறது. நேற்றைய தேர்வு திருச்சியில் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 224 பேர் தேர்விற்கு விண்ணப்பத்திருந்தனர். 2ம் கட்டம் மதியம் 3 முதல் 6 மணி வரையும் நடைபெற்றது. 160 பேர் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர்.
