×

தோல்வியில் முடிந்த சுரங்கம் தோண்டும் திட்டம்; இந்தியச் சிறை அதிகாரிகளை கண்டாலே நடுக்கம்: தீவிரவாத தலைவனின் ஒப்புதல் ஆடியோ வைரல்

புதுடெல்லி: இந்திய சிறையில் அனுபவித்த கொடூரமான தண்டனையை நினைத்தால் இப்போதும் தனக்கு பயமாக இருப்பதாக பயங்கரவாதி மசூத் அசார் ஆடியோ ஒன்றில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கோட் பல்வால் சிறையில் கடந்த 1990ம் ஆண்டுகளின் இறுதியில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார், அங்கிருந்து தப்பிக்க சக கைதிகளுடன் இணைந்து ரகசியமாகச் சுரங்கம் தோண்டினான். தப்பிக்கும் நாளன்று, அவனது உடல் பருமன் காரணமாகச் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அப்போது நடந்த மோதலில் அவனது கூட்டாளி சஜ்ஜத் ஆப்கானி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பின்னர் 1999ம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது, பயணிகளை மீட்கும் நிபந்தனையின் பேரில் அவன் விடுவிக்கப்பட்டான். விடுதலையான பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைத் தொடங்கி, இந்திய நாடாளுமன்றம் மற்றும் புல்வாமா தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமாக இருந்தான்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்த கூட்டம் ஒன்றில் மசூத் அசார் பேசிய ஆடியோ பதிவு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ‘இந்தியச் சிறையில் இருந்து தப்பிக்கும் வகையில் நாங்கள் சுரங்கம் தோண்ட முயன்றோம். இவ்விசயம் இந்திய அதிகாரிகளுக்கு தெரிந்ததும், அவர்கள் எங்களைச் சங்கிலியால் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் தண்டித்தனர். அன்று அவர்கள் கொடுத்த அடியையும், வலியையும் நினைத்தால் இப்போதும் எனக்கு உடல் நடுங்குகிறது; இந்தியச் சிறை அதிகாரிகளைக் கண்டாலே எனக்குப் பயம்’ என்று அவன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளான். இந்தியப் பாதுகாப்புப் படையினரின் கடுமையான நடவடிக்கைக்குப் பயந்து நடுங்கும் பயங்கரவாதியின் பேச்சு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Tags : New Delhi ,Masood Azhar ,Kot Palwal ,Jammu and ,Kashmir ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...