காரைக்குடி, டிச.13: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைகால நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. பணிகளை ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி அய்யப்பன் துவக்கிவைத்து பேசுகையில், சங்கராபுரம் பகுதியில் கொசுக்களின் மூலம் எந்தவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு பராமல் தடுப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழை காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக அனைத்து பகுதிகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. தவிர களபணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் தேவையற்ற குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் உள்ள டிரம் உள்பட அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டயர் உள்பட தேவையற்ற பொருட்கள் வீடுகளில் சேர்த்து வைக்க வேண்டாம். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தோங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர சாலையோரங்களில் இருந்து புதர்மண்டி கிடந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன. மழைகால தொற்றுநோய்களில் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் குளேரினேசன் செய்யப்பட்டு வருகிறது என்றார். கிட் அண்டு கிம் பொறியியல் கல்லூரி தலைவர் வி.அய்யப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
