வேதாரண்யம், டிச.13: தென் தமிழக கடற்கரை , வங்கக் கடல் மற்றும் கொமரின் பகுதிகளில் இரண்டு தினங்கள் அதிக காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என தமிழக மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைஅடுத்து நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதிகளில் உள்ள வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள 5,000 ஆயிரம் மீனவர்கள் நேற்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடி வலைகள், படகு என்ஜின்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தற்போது கோடியக்கரையில் மீன்பிடி சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன் பிடி சீசன் நடைபெறும். பல்வேறு பகுதியில் இருந்து மீனவர்கள் கோடிக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடிப்பது ஈடுபடுவது வழக்கம். நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் இழந்து உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
