×

ஆளுநர் ஆர்என்.ரவியை முற்றுகையிட முயற்சி: மதுரையில் பரபரப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவை பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் புறக்கணித்தார். விழா முதலில் தேசிய கீதம், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. ஆளுநர் ஆர்என்.ரவி பங்கேற்று 354 பேருக்கு பட்டம் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்என்.ரவி வரும்போது கருப்புக்கொடி காட்ட திட்டமிட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் டீலன் ஜெஸ்டின், டேவிட் ராஜ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆளுநரை கண்டித்தும், நிர்வாகிகள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விழா முடிந்து, ஆளுநர் வெளியே வரும்போது அவரது வாகனத்தை முற்றுகையிட இந்திய மாணவர் சங்கத்தினர் முயன்றனர். இதையடுத்து, ஆளுநரை மாற்று வழியில் போலீசார் அனுப்பி வைத்தனர். பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

* பாடத்திட்டத்தில் பறை இசை: ஆளுநர் விருப்பம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையில் ஆளுநர் விருப்ப நிதியில் பத்மஸ்ரீ வேலு ஆசானுக்கு புதிய குடியிருப்புடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்பாட்டு மையத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்து வைத்து பறை இசை கருவிகளை பார்வையிட்டார். பின்னர் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘பறை நம்முடைய ஒரு அங்கமாக உள்ளது. பறை இசையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம். அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? பறை இசை குறித்து அறிவியல்பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது? உயர் கல்வி ஆராய்ச்சி மையங்களில் முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கு ஆய்வுக்குட்படுத்த வேண்டும். பறை இசைக்கு நாடெங்கிலும் கவுரவம் கிடைக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Tags : Governor ,RN ,Ravi ,Madurai ,Thiruparankundram ,convocation ceremony ,Madurai Kamaraj University ,M.V.Arang ,Vice-Chancellor ,Minister for Higher Education ,Govi Chezhiyan ,Governor… ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...