பாலக்காடு: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோட்டப்பாடி கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாவேலி பகுதியில் காட்டுயானைகள் கூட்டமாக அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தியும், அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வருகின்றன. இவ்வாறு வரும் யானைகளை கண்காணித்து வனத்துறை காவலர்கள் அவற்றை மீண்டும் காட்டிற்குள் விரட்டியடித்து வந்தனர்.
காட்டுயானைகள், வனவிலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க மின்வேலி, அகழி ஆகியவை அமைத்துத்தரவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம், உள்ளாட்சி அமைப்பினரிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் வாவேலிக்குள் யானைகள் கூட்டமாக புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய பிறகு வனத்திற்குள் சென்றது. யானைகள் நடமாட்டத்தால் இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
