×

அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி

பெரம்பலூர்,டிச.12: பெரம்பலூரில் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலரான, மாவட்ட கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார். வருகிற 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான ஆயத்த பணியில் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மத்திய காப்பறையில் நேற்று(11ம் தேதி) அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்டக் கலெக்டர் மிருணாளினி துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது பயன் படுத்தப்பட்ட 898 கட்டுப்பாட்டு கருவிகள், 1472 வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் 910 வாக்குப் பதிவை சரிபார்க்கும் கருவிகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வருகிற 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு, பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 120 வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் என மொத்தம் 998 கட்டுப்பாட்டு கருவிகள் 1472 வாக்குப் பதிவு கருவிகள் மற்றும் 1030 வாக்குப்பதிவை சரிபார்க்கும் கருவிகள் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 5 பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு உட்படுத்தப்படவுள்ளன.

முதல்நிலை சரிபார்ப்பு பணியின் மேற்பார்வையாளர் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின், மாவட்ட வருவாய் அலுவலரும், தலைமை நிர்வாகியுமான பன்னீர் செல்வம் மேற்பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில், மேற்கண்ட அனைத்து இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் மேற்கொள்ளப்பட்டு, தேர்ச்சி பெறும் இயந்திரங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும். இப்பணியானது அனைத்து இயந்திரங்களும் சரிபார்க்கும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், முதல்நிலை சரிபார்ப்பு பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலரான எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி பன்னீர் செல்வம், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, தேர்தல் பிரிவு தாசில்தார் அருளானந்தனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,Election Commission of India ,District Election Officer ,District Collector ,Mrinalini ,Tamil Nadu… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...