ராமேஸ்வரம், டிச. 12: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியை அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினர் பாரம்பரியமாக செய்து வருகின்றனர். 22 தீர்த்தங்களில் நீராட வரும் பக்தர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ.25 டிக்கெட் கட்டணமாக கோயில் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.12 ஈவுத்தொகையாக யாத்திரைப் பணியாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது.
மொத்தம் 425 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கூட்டம் நேற்று முன்தினம் தலைவர் அ.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதில் மூன்று மாதங்கள் தாமதமாக வழங்கப்பட்டு வரும் ஈவுத்தொகையை யாத்திரை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிலுவையில்லாமல் வழங்க வேண்டும். திருக்கோயில் நிர்வாகம் ஏற்கனவே அனுமதித்த இடத்தில் யாத்திரைகளுக்கு பூஜைகள் நடத்த உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
இதற்கு அறநிலைத்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை தீர்மானம் ஏற்றியுள்ளனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் மலைச்சாமி உள்ளிட்ட நிர்வாக குழு மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
