×

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்; முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு: அமித்ஷா, எடப்பாடி அதிர்ச்சி

சென்னை: தவெக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார். தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:
முதல்வர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த இறுதி முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவெக சார்பில் ‘தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு’ அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களை காக்க, தவெக சார்பில் ‘தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு’ அமைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2026 சட்டசபை தேர்தலுக்காக வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூரில் விஜய் பிரசாரத்துக்கு வந்த 41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிபிஐ விசாரணையை வைத்து தவெகவை பாஜ கூட்டணிக்கு இழுக்க அக்கட்சி வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், பாஜ கூட்டணிக்கு செல்ல விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்வதற்காகத்தான் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தவெகவின் இந்த அறிவிப்பால் உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Tevag ,Vijay ,Amit Shah ,Edappadi ,Chennai ,Panayur ,General Secretary ,Pussy Anand ,Tevag state executive ,
× RELATED 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்;...