×

திருமண தகவல் வலைதளத்தில் பதிவு செய்து 20க்கும் அதிகமான பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி: சென்னை வாலிபர் அதிரடி கைது

மயிலம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயதுள்ள இளம்பெண் ஒருவர் காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேலும், தற்போது டிஆர்பி தேர்வுக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவருக்கு வீட்டில் திருமண வரன் வேண்டி திருமண தகவல் வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். அப்போது சென்னை, பூவிருந்தமல்லி, சென்னீர்குப்பம் ஜேஜே நகரை சேர்ந்த அண்ணாதுரை மகன் அருண்மொழி(36) என்பவரும் அதே வலைதளத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அருண்மொழி தனது செலவிற்காக அப்பெண்ணிடம் அடிக்கடி பணம் மற்றும் நகைகளை கேட்டுள்ளார். அப்பெண்ணும் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் 17 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் மற்றும் இருசக்கர வாகனம், ஐபோன் போன்றவற்றை கொடுத்துள்ளார். இதன் பின்னர் அருண்மொழி பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2 மாதங்களாக இளம்பெண் செல்போனில் தொடர்பு கொண்டும் அருண்மொழி சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் பெண்ணிடம் வாங்கிய நகை உள்ளிட்ட பொருட்களையும் திருப்பி தரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் மயிலம் காவல் நிலையத்தில் அருண்மொழி மீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக மோசடியில் ஈடுபட்ட அருண்மொழியை பிடித்து மயிலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இவர் ஆன்லைனில் சூதாடும் பழக்கம் உடையவர் எனவும், இதேபோன்று 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பல லட்சங்களை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மயிலம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,Mayilam ,Villupuram ,Kanchipuram ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...