×

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த எஸ்ஐஆர் படிவங்கள் வழங்க இன்று இறுதி நாள்: 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த எஸ்ஐஆர் படிவங்கள் வழங்க இன்று இறுதி நாள் ஆகும். இதையடுத்து 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து எஸ்ஐஆர் கணக்கீட்டு காலம் டிசம்பர் 11ம் தேதி வரை (இன்று) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எஸ்ஐஆர் பணி இன்றுடன் முடிவடைந்ததும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறும். இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து 16.12.2025 முதல் 15.1.2026 வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், எஸ்ஐஆர் பணியின்போது விடுபட்ட வாக்காளர்கள் வருகிற 16ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதிக்குள் படிவம்-6ஐ நிரப்பி வழங்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டு, பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும். தமிழ்நாட்டில் மட்டும் நேற்று முன்தினம் வரை 99.95 சதவீதம் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மொத்தமுள்ள 6,41,14,587 வாக்காளர்களில் 6,40,84,624 கோடி பேருக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் இதுவரை 99.55 சதவீதம் (6 கோடியே 38 லட்சத்து 25 ஆயிரத்து 877) எஸ்ஐஆர் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை எஸ்ஐஆர் விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து வழங்காதவர்கள் இன்று (11ம் தேதி) மாலைக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Election Commission of India ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...