×

அண்ணாமலையை சந்தித்தது ஏன்? மீண்டும் பாஜவுடன் கூட்டணியா? டிடிவி.தினகரன் பேட்டி

மேட்டுப்பாளையம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி.தினகரனிடம் மீண்டும் கூட்டணியில் இணைய அண்ணாமலை இருமுறை சந்தித்து பேசிவிட்டு டெல்லி சென்றுள்ளார். இதனால், மீண்டும் பாஜ கூட்டணியில் டிடிவி இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அமமுக கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் அதில் இணைவோமா என்ற கேள்வியே தவறு. நாங்கள் எதற்கு இணைய வேண்டும். அண்ணாமலை என் நண்பர். அண்ணாமலையை சந்தித்தது நட்பு ரீதியிலானது. இதில் அரசியல் இல்லை.கூட்டணியில் சேர அமமுக எந்த நிபந்தனையும் விதிக்காது. மரியாதை அளிக்கும் இடத்தில் அமமுக இடம் பெறும். அமமுக இருக்கும் கூட்டணி தான் வெற்றிபெறும். அதில் நாங்கள் கூட்டணி அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறுவது எதிர்கட்சிகளின் கூட்டணி பலவீனத்தை வைத்தும், கூட்டணியில் தவறு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அறைகூவல் விடுகிறார்கள். டிச.10 (இன்று) முதல் வரும் 18ம் தேதி வரை அமமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதி மற்றும் புதுச்சேரியிலும் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Annamalai ,BJP ,TTV.Dhinakaran. ,Mettupalayam ,TTV.Dhinakaran ,National Democratic Alliance ,Delhi ,TTV ,AMMK Coimbatore North District… ,
× RELATED சொல்லிட்டாங்க…