- புதிய சமூகம்
- நல மையம்
- கொளத்தூர்
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- சென்னை
- சேகர்பாபு
- சமூக நல மையம்
- பேரறிஞர் அண்ணா
- சென்னை கார்ப்பரேஷன்
- ஜம்புலிங்கம் மெயின் ரோடு, ஜிகேஎம் காலனி, கொளத்தூர்
சென்னை: கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா பெயரில் ரூ.25.72 கோடியில் புதிய சமுதாய நலக்கூடத்தின் இறுதிக் கட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா பெயரில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினால் வரும் 18ம் தேதி திறக்கப்படவுள்ளது. புதிய சமுதாய நலக் கூடத்தின் இறுதிக் கட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த சமுதாயக் கூடம் 40,300 சதுரடி பரப்பளவில் தரைத்தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடனும், முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 435 நபர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் உணவுக்கூடம், 2வது தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண மண்டபம் 3ம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, ராயபுரம் மண்டலம், வார்டு-57க்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டுமானப் பணியினை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 28,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், தரைத்தளத்தில் 30 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 50 எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், முதல்தளத்தில் உணவருந்தும் கூடம், சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகள், 2வது தளத்தில் திருமண நிகழ்விடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர், வார்டு-57க்குட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிநீர் தேக்க நிலையத்தின் முன்னேற்றப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின் போது, தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
