×

நாட்டின் ஒற்றுமைக்கு தமிழ்நாடு ஒத்துழைக்கும்; ஆனால் ஒருபோதும் மண்டியிட மாட்டோம்: மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என். சோமு பேச்சு

டெல்லி: நாட்டின் ஒற்றுமைக்கு தமிழ்நாடு ஒத்துழைக்கும், ஆனால் ஒருபோதும் மண்டியிட மாட்டோம் என மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு செஸ் மசோதா- 2025’ மீது நடந்த விவாதத்தில் தி.மு.க. எம்.பி., கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது: இந்தியக் குடியரசின் முக்கியமான மூன்று தூண்களான நிதி கூட்டாட்சி, அரசியலமைப்பைக் காக்கும் பொறுப்பு, பொது சுகாதாரம் ஆகிய விஷயங்களோடு தொடர்புடையது இந்த ‘சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு செஸ் மசோதா-2025’. இந்த மசோதாவின் பெயரே சர்ச்சைக்குரியதாக இருக்கிறது.

இந்தியில் ‘ஸே’ என்கிற வார்த்தை எதற்கு இந்த மசோதாவின் பெயரில் இடம்பெற்றுள்ளது? சட்டப்பூர்வமான எந்த வார்த்தைக் கட்டமைப்புடனும் இந்த வார்த்தை பொருந்தாது. இது சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்கு ஒவ்வாத, மொழி வழக்கத்தில் இல்லாத வார்த்தையும் கூட. தேசியப் பாதுகாப்புக்கும், பொது சுகாதாரத்துக்கும் ஏற்படும் செலவுகளுக்காக செஸ் வரிவிதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. குறிப்பாக பான் மசாலா மற்றும் புகையிலை விற்பனை மீது இந்த செஸ் விதிக்கப்பட்டு, அதன் வருவாய் பாதுகாப்பு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று சொல்கிறீர்கள். அந்தத் தேவைக்கு மட்டும்தான் இந்தப் பணம் முழுமையாக செலவிடப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஏனென்றால், 2019 ஆண்டு முதல் பல்வேறு வகைகளில் வசூலிக்கப்பட்ட செஸ் மற்றும் கூடுதல் வரிப்பணம் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இன்னும் செலவிடப்படாமலேயே இருக்கிறது. இந்த அரசு செஸ் வருவாயை நிர்வகிக்கும் மோசமான நிர்வாகத்தையே இது காட்டுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் பற்றி பேசும்போது, கடந்தகால வரலாற்றை மட்டும் நாம் பேசுவதில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்த நாட்டில் நிலவிய பொருளாதார அநீதி பற்றியும் நினைவு கூர்வோம். அந்தளவுக்கு இந்த நாட்டு மக்களின் வருவாயைச் சுரண்டியவர்கள் அவர்கள். இப்போதைய நிதி நிர்வாகத்தைப் பார்த்தால் அந்த அவலமான நிலைதான் நினைவுக்கு வருகிறது.

நிதி நிர்வாக விஷயங்களில் மாநில அரசுகளைப் புறக்கணித்து, வருவாய் மொத்தமும் ஒன்றிய அரசிடம் சேரும் வகையில்தான் இப்போது எல்லா விஷயங்களும் அமல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையை மாற்றத்தான் நாம் அனைவரும் ஒரு காலத்தில் போராடினோம் இப்போதும் அது தொடர்வது வேதனையான ஒன்று. ஜிஎஸ்டி வரியை அறிமுகம் செய்தபோது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் இது என்று சொன்னார் நமது பிரதமர். இது எந்த ஒரு தனிப்பட்ட கட்சியின் சாதனை அல்ல… ஒட்டுமொத்த தேசத்தின் கருத்தொற்றுமையின் மூலமாக எட்டப்பட்ட சாதனை என்றார். ஜிஎஸ்டி அறிமுகமானபோது, நவீன இந்தியாவை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து உருவாக்குவதற்கான ஒரு விஷயமாக உருவகப்படுத்தினீர்கள்.

இதை அமல்படுத்தும் பொறுப்பை மட்டுமல்ல, அது தொடர்பான அதிகாரத்திலும், வருவாயிலும் கூட பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று மாநில அரசுகளுக்குச் சொன்னீர்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த மசோதாவில் கூட, பான் மசாலா மற்றும் புகையிலை உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து செஸ் வசூலிக்கும் பொறுப்பு ஒன்றிய அரசிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பாதுகாப்புக்காக இந்த வரி என்று சொல்லிவிட்டு, அதை முழுமையாக அமல்படுத்தும் மாநில அரசுகளிடம் இந்த வரி வசூல் பொறுப்பை ஏன் கொடுக்கவில்லை? உண்மையிலேயே இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்துக்கு உயிர்கொடுக்கிறதா? அல்லது சீர்திருத்தம் என்ற பெயரில் சத்தமில்லாமல் அதை அழிக்கிறதா? உண்மை நிலவரம் மிகுந்த மனவேதனைக்குரியதாக இருக்கிறது.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்வோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு மாறாக செயல்படுவதற்குதான் இந்த மசோதா வழிவகுக்கும். இப்படிச் செய்தால் இணைந்த கூட்டாட்சி என்ற தத்துவம் என்னவாகும்? அடுத்ததாக, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்து அதன்படி நடப்பது. அரசமைப்புச் சட்டம் பிரிவு 14 ன் படி இந்த மசோதா எல்லோருக்கும் சமமான சுமையை, வாய்ப்புகளை, வழங்குவதாக அமைய வேண்டும். வரியை சமமாகப் பங்கிடுவோம் என்ற நம்பிக்கையில்தான் தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டியை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஒவ்வொருமுறை இப்படி செஸ் வரி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதும், வருவாயை ஒன்றிய அரசு பெற்றுக்கொண்டு சுமையை மட்டும் மாநில அரசுகள் மீது ஏற்றும் வகையில் அந்த ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மாற்றி எழுதுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசின் பயம், கற்பனையோ, மிகைப்படுத்தப்பட்டதோ, அரசியல் உள்நோக்கம் கொண்டதோ இல்லை. ஒன்றிய பிஜேபி ஆட்சியில் நிதிப் பகிர்வு விஷயத்தில் தமிழ்நாடு அரசு சந்தித்த அநீதி மற்றும் பாகுபாடுகள் எத்தனையோ உண்டு. சிலவற்றைச் சொல்கிறேன்… தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில், சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய நிதியை தர மறுக்கிறது இந்த அரசு. காலாவதியான 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காட்டி மதுரை, கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சென்னை மாநகர மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியையும் உரிய காலத்தில் வழங்காமல், தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பிறகே வழங்கப்பட்டது.

சுகாதாரப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, பான் மசாலாவும் புகையிலையும் ஆரோக்கியத்திற்கு கேடானது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், மாநிலங்களுக்கும் வரிப் பகிர்வு என்ற தத்துவத்திலிருந்து, ஒன்றிய அரசுக்கு மட்டுமே வரி வருவாய் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறதா இந்த அரசு? தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது நடந்த குட்கா முறைகேடு வழக்கு நினைவிருக்கிறதா? அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் அந்த முறைகேட்டை செயல்படுத்திய விதம் எப்படி தெரியுமா? கணக்கில் வராத குட்காவை கள்ள மார்க்கெட்டில் விற்று, பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து, கோடிக் கணக்கான பணத்தை லஞ்சமாகப் பெற்று, சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இப்போதைய ஒன்றிய அரசும் அப்படித்தான் செய்யப்போகிறதா? மாநில அரசின் வருவாயைப் பறித்து ஆயிரக் கணக்கான கோடி ரூபாயை தனது பாக்கெட்டில் நிரப்பிக்கொள்ளப் போகிறதா? கூட்டாட்சித் தத்துவத்தைப் புதைத்துவிட்டு, வரிப்பகிர்வு என்ற வார்த்தையையே மறந்துவிட்டு இந்தப் பணத்தை தன் வசப்படுத்தப் போகிறதா ஒன்றிய அரசு? இந்த நிலைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான், எங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 12 வது நிதிக்குழு பரிந்துரையின்படி செஸ் மற்ரும் கூடுதல் வரிகளை 10 சதவிகிதத்துக்குள் அமைத்துக்கொள்ளும்படி ஒன்றிய நிதி அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். அதற்கும் கூடுதலான வரிகளை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒன்றிய அரசின் 75 சதவிகித வருவாயை எல்லா மாநிலங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் எங்கள் முதலமைச்சர் வலியுறுத்தினார். ஆனால், தமிழ்நாட்டிற்கான வருமானவரிப் பகிர்வு 15.52 சதமாகவும்; ஒன்றிய அரசின் சுங்க வரியில் 16.44 சதமாக இருந்தது 4.07 சதமாகவும் குறைக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு என்றார் திருவள்ளுவர். செங்கோல் ஏந்தி ஆட்சியில் உள்ளவர்கள் தண்டிக்கும் இயல்போடு தன் குடிமக்களிடம் வரி வசூலிப்பது, ஆயுதத்தைக் காட்டி அப்பாவி வழிப்போக்கர்களிடம் கொள்ளையடிப்பதற்குச் சமம் என்று வள்ளுவர் சொன்னதையே நானும் வலியுறுத்திச் சொல்கிறேன்.

வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவுக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும். ஆனால் மாநிலங்களை பலவீனமாக்கிவிட்டு இந்தியாவை வலிமைப்படுத்தவும் முடியாது; ஒற்றுமைப்படுத்தவும் முடியாது. ஒரு தேசம் பலமாக இருக்க வேண்டுமானால், அதன் மாநிலங்கள் பொருளாதாரத்தில், நிர்வாகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையில் பலமாக இருக்க வேண்டும். ஆனால் மாநிலங்களுக்கு வரவேண்டிய வருவாயை எல்லாம் ஒன்றிய அரசு வைத்துக்கொண்டு, உரிமையான, நியாமான நிதி உதவிகளுக்காக மாநில அரசுகளை கெஞ்ச வைப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் ஆன்மாவைச் சிதைப்பதாகும்.

தேச ஒற்றுமைக்கு தமிழ்நாடு ஒத்துழைக்கும்; ஆனால் ஒருபோதும் மண்டியிடாது. எங்கள் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். சீர்திருத்தம் என்ற பெயரில் வருவாயை, எங்கள் சுயாட்சியைப் பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்க வேண்டும் என்று இந்த அவை விரும்பினால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான சமநிலையை பாதிக்கச் செய்யும் எந்தப் பரிந்துரையையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags : Tamil Nadu ,Kanimuzhi N. V. N. Somu ,Delhi ,Dr. ,Kanimozhi N. V. N. Somu ,
× RELATED வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி...