புதுடெல்லி: மபியில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20 குழந்தைகள் பலியானதையடுத்து மருந்து நிறுவனத்தின் உரிமையாளரின் சென்னையில் உள்ள வீடுகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.தமிழ்நாட்டின் சுங்குவார் சத்திரத்தில் செயல்பட்டு வந்த ஸ்ரீ சன் பார்மசூட்டில் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் என்னும் இருமல் மருந்தை உட் கொண்டதால் மபி மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த மருந்தில் நச்சுத்தன்மையுள்ள ரசாயன பொருட்கள் அதிகமாக கலக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. குழந்தைகள் பலியானது தொடர்பாக ஸ்ரீசன் பார்மா மருந்து கம்பெனி அதிபர் ரங்கநாதனை மபி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீசன் மருந்து கம்பெனி அதிபர் ரங்கநாதனுக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரூ.2.04 கோடி மதிப்புள்ள வீடுகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
