×

நாடாளுமன்ற வளாகத்தில் புதிய 4 தொழிலாளர் சட்டங்களை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்: கார்கே, சோனியா, ராகுல் காந்தி பங்கேற்பு

புதுடெல்லி: புதிய 4 தொழிலாளர் சட்டங்களை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று அவை கூடுவதற்கு முன்பாக, கூட்டத்தொடருக்கான கூட்டு உத்தி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கூடினர். இதில், காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாடி, ஜேஎம்எம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்தது.

காங்கிரஸ் தலைவர் கார்கே அறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் ஒன்றிய அரசு மீதான தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவை தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு தலைவர்கள் கூறினர். நாடாளுமன்றம் சுமூகமாக இயங்க வேண்டும், அதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றனர்.இந்த கூட்டத்தை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் நுழைவாயில் படிக்கட்டுகள் அமைந்துள்ள மகர் துவாருக்கு வெளியே புதிய 4 தொழிலாளர் சட்டங்களை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்பிக்கள் ‘கார்ப்பரேட் காட்டு ராஜ்ஜியம் வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்’’ என்ற பிரமாண்ட பேனரை ஏந்தி பங்கேற்றனர். அப்போது அவர்கள் 4 தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

போராட்டத்திற்குப் பிறகு கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘புதிய தொழிலாளர் சட்டத்தில் பணிநீக்க வரம்பு 100-ல் இருந்து 300 தொழிலாளர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள 80% க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இனி அரசின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய முடியும். இது பணி பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால வேலைவாய்ப்பின் விரிவாக்கம் பல நிரந்தர வேலைகளை முடிவுக்குக் கொண்டுவரும். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு 60 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது விரைவான நடவடிக்கையைத் தடுக்கிறது. 51% உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோருவது சிறிய தொழிற்சங்கங்களை ஓரங்கட்டுகிறது’’ என்றார்.போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘புதிய 4 சட்டங்கள் மூலம், தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் அரசு பறித்துவிட்டது. இவை சுரண்டல் சட்டங்கள்’’ என்றார்.

Tags : Kharge ,Sonia ,Rahul Gandhi ,New Delhi ,Congress ,Mallikarjun Kharge ,Sonia Gandhi ,Parliament ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...