×

ஜனவரியில் இரண்டாவது சேவை தொடக்கம் ஏ.சி மின்சார ரயிலில் குறைந்த கட்டணம் வசூலித்தால் வரவேற்பு கிடைக்கும்: பயணிகள் கருத்து

சென்னை: ஜனவரி முதல் 2வது ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் குறைந்த கட்டணம் வசூலித்தால் வரவேற்பு மிகுந்ததாக இருக்கும் என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் ரயில் சேவையில் முதல் ஏசி மின்சார ரயில் சென்னை தாம்பரம் – செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.

இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையில் 2வது ஏசி மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 1,120 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில் 5 ஆயிரம் பேர் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இந்த சேவையை தொடங்க திட்டமிட்டுள்ள தெற்கு ரயில்வே, விரைவில் இதற்கான சோதனையை தொடங்கவுள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் முதல் ஏசி ரயில் சேவையில் போதுமான அளவில் பயணிகள் பயணிப்பது இல்லை என ரயில்வே தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதிக கட்டண வசூல் என்பதுதான் பயணிகளின் கருத்தாக உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: விமான நிலையம் திரிசூலம் முதல் எழும்பூர் வரை ஏசி மின்சார புறநகர் ரயிலில் ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாதாரண மின்சார புறநகர் ரயில் ரூ.5, மெட்ரோவில் செல்ல ரூ.32 வசூலிக்கப்படுகின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு 40,000 பயணிகள் செல்லக்கூடிய ஏசி மின்சார ரயிலில் 2800 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். இரண்டாவது ஏசி மின்சார ரயில் வரும்பட்சத்தில் பொதுமக்களுக்கு ஏற்றத்தக்க வகையில் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பட்சத்தில் கட்டாயம் வரவேற்பு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Chennai ,Tambaram… ,
× RELATED பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!