திருவிக நகர் மண்டலத்தில் கடைகளாக மாறிய நடைபாதைகள்: பாதசாரிகள் அவதி

பெரம்பூர்: சென்னையில் நடைபாதை சீரமைப்பு பணிக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. அவ்வாறு சீரமைக்கப்படும் நடைபாதைகள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. காரணம் பெரும்பாலான  நடைபாதைகள் கடைகளாக மாறியுள்ளன. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடசென்னையில் திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், திருவிக  நகர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான நடைபாதைகள் கடைகளாக மாறியுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதுபற்றி யாராவது புகார் கொடுத்தால் பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றுகின்றனர். ஆனால்,  அவர்கள் சென்ற சில மணி நேரத்திலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்துவிடுகிறது. கொளத்தூர் கார்த்திகேயன் சாலை, அண்ணா சிலை சுற்றுவட்டார பகுதி, பாலாஜி நகர், செங்குன்றம் நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை,  பட்டேல் ரோடு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை, புளியந்தோப்பு சாலை ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் துரித உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மற்றும் செல்போன் கடைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்த பகுதிகளில் நெரிசல் அதிகரித்து வருகிறது.நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், ‘‘நடைபாதை  நடப்பதற்கே’’ என பலகையை மட்டும் வைத்து, தனது கடமையை முடித்துக்கொள்கிறது.  ஒவ்வொரு வார்டிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்கவேண்டிய உதவி பொறியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் மாதம்தோறும் மாமூல் பெற்றுக்கொண்டு, கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், நெரிசல் அதிகரித்து தினசரி காலை  நேரங்களில் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், என பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.

Related Stories:

>