×

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: உச்சநீதிமன்ற கண்காணிப்பு குழு வேலுசாமிபுரத்தில் ஆய்வு

கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் நேற்று கரூர் சிபிஐ விசாரணை அலுவலகம் வந்தனர். இவர்களுடன் சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாக்கூரும் வந்தார்.
தொடர்ந்து அவர்கள், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட ஆவணங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் மனு அளிக்க வந்தவர்களிடம் விசாரித்து மனு பெற்றனர். தவெக வக்கீல் அரசு, மாவட்ட செயலாளர் மதியழகனின் மனைவி ராணி மற்றும் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர். இவர்களை தொடர்ந்து கலெக்டர் தங்கவேல் பிற்பகல் 12 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகி உச்சநீதிமன்ற குழுவிடம் விளக்கம் அளித்தார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விளக்கம் பெறப்பட்டது.

பின்னர் மத்திய மண்டல போலீஸ் ஐஜி ஜோஷி நிர்மல்குமார், கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா, டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோரும் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் கண்காணிப்பு குழுவின் முன்பு மாலை 4 மணிக்கு ஆஜராகி ஒன்றேமுக்கால் மணி நேரம் விளக்கம் அளித்தனர். நேற்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உச்சநீதிமன்ற மேற்பார்வை குழுவினர் சுமார் 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புகழூர் காகித ஆலை விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். இந்நிலையில் 2வது நாளாக இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்ற மேற்பார்வை குழுவினர் கரூர் பயணியர் மாளிகைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி ஜோஸ் தங்கையா ஆஜரானார். தொடர்ந்து நெரிசலில் பாதிக்கப்பட்ட ஆத்தூரை சேர்ந்த சிவா மனு அளித்தார்.

பின்னர் வெளியே வந்த அவர், விஜய் கூட்டத்துக்கு குழந்தைகள் அகிலாண்டேஸ்வரி, ஐஸ்வர்யாவையும் 3 மணிக்கு அழைத்து வந்தேன். இரவாகியும் விஜய் வரவில்லை. இதில் நெரிசலில் சிக்கி எனது 2 குழந்தைகளும் காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தேன். இந்த சம்பவத்துக்கு முழுக்க முழுக்க விஜய் தான் காரணம் என தெரிவித்தார். இதையடுத்து மேற்பார்வை குழுவின் தலைவர் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் காலை 11 மணிக்கு, 41 பேர் பலியான வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது எஸ்பி ஜோஸ் தங்கையா உடனிருந்தார். பின்னர் தவெகவினர் கேட்டு மறுக்கப்பட்ட இடங்களான லைட்ஹவுஸ், உழவர் சந்தை, மனோகரா கார்னர் ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டனர்.

Tags : Vijay ,Supreme Court ,Velusamypuram ,Karur ,CBI ,Supreme Court Monitoring Team ,Ajay Rastogi ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...