- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி பார் கவுன்சில்
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- எஸ்.எம்.வெற்றிவேல்
- சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.எம்.வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவில், 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகித இயலாமைக்கு குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான ரூ.1,25,000 கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டுமென்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கவுதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர் வாதிடும்போது, மனுதாரருக்கு தேர்தலை தாமதப்படுத்துவதோ, தடுப்பதோ நோக்கம் இல்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றுவதன் மூலம் சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதுதான்.
மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும், எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றனர். இதற்கு, பார்கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென்ற காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
அதை கண்காணிக்க இமாச்சலபிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதில் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
