திருப்பூர்: மின் இணைப்பு விதிமீறல் தொடர்பாக திருப்பூர் மேயருக்கு மின்வாரியம் ரூ.42,500 அபராதம் விதித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். இவர் திருப்பூர் புதுக்காடு பகுதியில் உள்ள தனது இல்லத்தை இடித்து புதிதாக புனரமைக்கும் பணிகள் செய்து வருகிறார். இதற்கு ஏற்கனவே இருந்த மின் இணைப்பு தொடர்பாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அதே மின் இணைப்பை வீடு கட்டுமான பணிக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் விதிமீறல் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேயர் தினேஷ் குமாருக்கு 42,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மேயர் தினேஷ் கூறுகையில், ‘ஏற்கனவே மேயர் அக்டோபர் மாதம் தற்காலிக மின் இணைப்புக்கு பணம் செலுத்தி உள்ளார். மின் கணக்கீடு செய்ய வந்தவர்கள் அதனை மாற்றாமல் கூடுதல் கட்டணம் என தவறாக பதிவிட்டுள்ளனர். அதற்கு புகார் செய்ய உள்ளேன்’ என்றார்.
