திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 வருடங்களாக எச்ஐவி பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பான சில அதிர்ச்சியூட்டும் விவரங்களை கேரள எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு முதல் எச்ஐவி தொற்று அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக 100 புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 2022ம் ஆண்டில் 9 சதவீதமும், 2023ம் ஆண்டில் 12 சதவீதமும், 2024ம் ஆண்டில் 14.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான் எச்ஐவியால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.இந்த வருடம் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த வயதுக்குட்பட்டவர்களில் தொற்று பரவல் சதவீதம் 15.4 ஆகும்.
கடந்த 3 வருடங்களில் கேரளாவில் 4,477 பேர் புதிதாக எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3393 பேர் ஆண்கள், 1065 பெண்கள் ஆவர். இதில் 19 திருநங்கைகளும், 90 கர்ப்பிணிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 3 வருடங்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மிக அதிகமாக 850 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் 67 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
