புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி நேற்று முன்தினம் தனது காரில் தெரு நாய் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வந்தார். தெருவில் இருந்து மீட்கப்பட்ட நாயை காரில் கொண்டு வந்ததாக கூறிய ரேணுகா சவுத்ரி, ‘‘உள்ளே இருப்பவர்கள் தான் கடிப்பார்கள், நாய் அல்ல’’ என கூறியது கடும் சர்ச்சையானது.
இது குறித்து ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறும் போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாய் இன்றைய முக்கிய தலைப்பு என்று நான் நம்புகிறேன். ஏழை நாய் என்ன செய்தது. நாய் இங்கே வந்தது. அது ஏன் அனுமதிக்கப்படவில்லை.இந்தியா இப்போதெல்லாம் விவாதிக்கும் விஷயங்கள் இவைதான் என்று நினைக்கிறேன். செல்லப்பிராணிகளுக்கு வெளியே அனுமதி கிடையாது, ஆனால் உள்ளே’ என நாடாளுமன்றத்தை நோக்கி விரலை காட்டியபடி சென்றார்.
இந்த கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜ எம்பியும், தேசிய செய்தி தொடர்பாளருமான சம்பித் பத்ரா, ‘‘காங்கிரசின் ராகுல் காந்தியும், ரேணுகா காந்தியும் அவர்களின் பேச்சுகள் மூலம் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் புண்படுத்தியதோடு, எம்பிக்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், அதிகாரிகள் என அத்தனை பேரையும் அவமதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி விரக்தியில் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. இந்த மாதிரியான பேச்சு, நடத்தையால் நாடு உங்களை மதிக்குமா? இப்படி நீங்கள் பேசினால் மக்கள் எப்படி உங்களுக்கு வாக்களிப்பார்கள்?’’ என்றார்.
பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி எக்ஸ் பதிவில், ‘ராகுல் காந்தி தனது சொந்த காங்கிரஸ் எம்பிக்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் நாயுடன் ஒப்பிடுகிறார்! வாரிசுதலைவர்கள் ஜனநாயகக் கோயிலை இப்படித்தான் நடத்துகிறார்கள்’ என்று தெரிவித்தார்.
